Mon. Oct 25th, 2021

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

1 min read

புதுச்சேரி
புதுவை கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  அதிரடி சோதனை நடத்தினர்.
சான்றிதழ் வழங்க லஞ்சம்
 
புதுச்சேரியில் சென்டாக் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் கலந்தாய்வின் போது சாதி, குடியிருப்பு, குடியுரிமை உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தநிலையில் வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகவும், லஞ்சம் வழங்காதவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்கள் குவிந்தன.
திடீர் சோதனை
 
அதன்பேரில் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு நிதின்கவுல் உத்தரவின்பேரில் காந்தி நகரில் உள்ள தட்டாஞ்சாவடி, உழவர்கரை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர்  திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சோதனை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை தொடரும்
 
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், `வருவாய் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் இடைத்தரர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சோதனை செய்தோம். வருவாய் சான்றிதழ் வழங்குதற்கான காலதாமதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அதற்கான காரணம் குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், புகார் வந்துள்ள பிற அரசு துறைகளிலும் சோதனை நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *