வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமை.. மனஉளைச்சல்.. பொறியியல் பட்டதாரி தற்கொலை
1 min read
புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தீபக் (வயது 22). சிவில் இன்ஜினியர் பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்துக்கு பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடி வந்துள்ளார். அதன் பிறகு சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு சீரானது. அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் அவருக்கென தனியாக அறை இருந்தது. அந்த அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போன், கேம் விளையாட தேவையான அனைத்து வசதிகளும் செய்திருந்தார்.தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாடி வந்த சூழலில் நேற்று இரவு அவரது தனது பிரத்யேக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
போலீஸார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இவ்விசாரணை தொடர்பாக போலீஸார் கூறுகையில்,” முதல்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாகவே தீபக் அதிக பதற்றத்துடன் இருந்துள்ளார். அத்துடன் அதிக கோபத்துடன் டென்ஷனாக இருப்பதால் யாரும் தன்னிடம் பேசவேண்டாம் என்றும் தெரிவித்தார். அவரது அறையில் கணினி, மொபைல் கேம் விளையாடும் வகையில் அனைத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.மொபைல்போன், விடியோ கேம் தொடர்ச்சியாக அதிகநேரம் விளையாடியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் விரக்தியாகி தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மிக அதிகமாக செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.