Wed. Jul 8th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

முருங்கைக் கீரையின் சத்துகளும், மருத்துவப் பயன்களும்

1 min read

murungai2

நம் முன்னோர்கள் உடல்நலனைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவர்கள் பல வகையான, இயற்கையில் கிடைக்கும் தாவர வகைகளை மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்றாகும். முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது.
வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ப. விஜயலட்சுமி கூறியது:
முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. இதர கீரைகளைவிட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இது, முருங்கைக் கீரைக்கே உண்டான சிறப்பு அம்சமாகும். எனவே தான் முருங்கைக் கீரை சத்துப் பற்றாக்குறையை குணப்படுத்தும் உணவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
நம் உணவு முறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின் காரணமாக, நம் குழந்தைகளிடையே சத்துப் பற்றாக்குறை நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும், குறிப்பாக வைட்டமின் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படுகிறது.  இச்சூழ்நிலையில் இயற்கையான சத்துகள் நிறைந்த உணவுகளை மீண்டும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 8 கிராம் உலர்ந்த முருங்கைக்கீரை பவுடர் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான 14 சதம் புரதச்சத்தும், 40 சதம் கால்சிய சத்தும், 23 கிராம் இரும்புச்சத்தும், தேவையான வைட்டமின் ஏ சத்தும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி குறிப்புகளில் கூறப்படுகின்றன.
முருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.
ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக் கீரை இது. இக்கீரை மலிவானது மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்
களிலும் கிடைக்கும். தமிழ்நாட்டிலிருந்து முருங்கைக் கீரை அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் முருங்கை இலை உணவுகளை கர்ப்பிணி பெண்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஆரோக்கிய உணவாக பரிந்துரைக்கின்றனர். தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், தூத்துக்குடி, தாராபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது.
நமது உழவர்கள் காய்களை மட்டும் வியாபாரம் செய்கிறார்கள். முருங்கைக் கீரையை பெரும்பாலான உழவர்கள் வியாபார ரீதியாக விற்பனை செய்வதில்லை. நம் நாட்டில் முருங்கைக் கீரையைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
முருங்கக் கீரையை சுத்தப்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதாலும், அதன் மணம் சிறிது கசப்புத் தன்மையோடு இருப்பதாலும், மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துவதில்லை. பச்சைக்கீரை தேவையானபோது கிடைப்பது அரிது. ஆனால், உலர்ந்த கீரையைச் சேமித்து வைத்தல் எளிது. பல நாள்கள் கெடாமல் இருக்கும்.
ஒர் ஏக்கர் முருங்கையைப் பயிரிட குறைந்த முதலீடாக ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை போதுமானது. 3 ஆண்டு வரை வருடத்திற்கு 6 டன் முருங்கைக் கீரையை அறுவடை செய்யலாம். ஒரு மாதத்திற்கு அரை டன் அளவு, இருமுறை அறுவடை செய்யலாம். இக்கீரையை உலர வைக்கும்போது சுமார் 200 கிலோ உலர்ந்த கீரைப்பவுடர் கிடைக்கும். ஒரு கிலோ பவுடர் ரூ. 400 வரை விற்பனை செய்யலாம்.
உலர்ந்த முருங்கைக் கீரைப் பவுடரைப் பயன்படுத்தி மசாலா சப்பாத்தி மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சாதப்பொடி, சத்துபானம், குக்கீஸ் வகைகள், சூப் மிக்ஸ் உள்பட 21 வகையான உணவுகள் செய்யலாம் என ஆராய்ச்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுகளை எளிதில் நாள்தோறும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக் கீரையை அன்றாட உணவில் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *